சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

பல முறை 'வாய்தா' வாங்கி, மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.- இயக்குநர் மகி வர்மன்
Updated on : 06 April 2022

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'வாய்தா' படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார்.



 



வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வாய்தா'. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார்.



 



இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியான சி மகேந்திரன், தயாரிப்பாளர் சி. வி. குமார், படத்தின் தயாரிப்பாளர் கே. வினோத்குமார், இயக்குநர் மகிவர்மன், புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன், பாடலாசிரியர் உமாதேவி, படத்தின் ஆடியோவை வெளியிடும் உரிமை பெற்றிருக்கும் டிப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான சரண்யா, படத்தின் நாயகி  பவுலின் ஜெசிகா, கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் நரேஷ் குணசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



 



இவ்விழாவின் இயக்குநர் மகி வர்மன் பேசுகையில், '' வாய்தா திரைப்படத்திற்கு படக்குழுவினர் ஆகிய நாங்கள் பல முறை 'வாய்தா' வாங்கி, மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நான் இந்தப் படத்திற்காக கதை எழுதும் முன் மாற்று சினிமா குறித்தும், மலையாள சினிமா குறித்தும் ஏராளமான திரை ஆர்வலர்கள் பேசியிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான படைப்புகள் வருகை தந்து கொண்டிருக்கிறது.



 



சாதிய ரீதியிலும், வர்க்க ரீதியிலும் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படைப்புகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனால் 'வாய்தா' அத்தகைய தோற்றத்திலான படமாக  பார்க்கப்படும். ஆனால் 'வாய்தா' படத்தை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் மக்கள் பிரச்சனையை பேசும் படமாக தொடங்கிவிட்டோம். சினிமாவில் முதல் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்ததால், இந்தப் படைப்பு சற்று தாமதமாக வந்திருக்கிறது.



 



இந்தப் படத்தை முதலில் 'ஏகாலீ' என்ற பெயரில் சுயாதீன திரைப்படமாக தான் உருவாக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் நண்பர் ஒருவர் மூலமாக தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை சந்தித்து ஒரு முறை கதையை சொன்னேன். கதை அவருக்கு பிடித்தது. உடனடியாக நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டார்.  படப்பிடிப்பு தளத்திற்கு அவர் ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே வருகை தந்து பார்வையிட்டார். எங்கள் மீது நம்பிக்கை வைத்து படைப்பு சுதந்திரத்தை வழங்கினார். இதற்காக என்னுடைய முதல் நன்றியை அவருக்கு தெரிவிக்கிறேன்.



 



என்னுடைய படைப்பு மக்களுக்கானது. நான் கலையை மக்களுக்காக என்ற கொள்கை கொண்டவன். கலை கலைக்காக அல்ல என்பதை கடந்து கலையை மக்களுக்கானதாக காண்கிறேன்.



 



படத்தின் தொடக்கத்தில் முதலில் பாடல்களை வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் சின்ன சின்ன அரசியல் பேசும் பாடல்களை இணைத்தோம். 'ஜோக்கர்' படத்தில் எழுத்தாளரும், நடிகருமான பவா அவர்களின் குரலைக் கேட்டு, இந்தப் படத்திலும் அவரை பாட வைத்திருக்கிறோம். இதுபோன்று புது புது முயற்சிகளை செயல்படுத்த தொடங்கி, ஒன்பது பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.



 



கடின உழைப்பிற்குப் பிறகு படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை குழுவிற்கு சென்றோம். ஏகாலி என்ற பட தலைப்பை பதிவு செய்யும்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கிறது. அந்த சாதிய அமைப்புகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழை வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் அமைப்பிலிருந்து  தடையில்லா சான்றிதழை வாங்கி தலைப்பை பதிவு செய்தோம். அப்போதிருந்தே இந்த படத்திற்கு பிரச்சனை தொடங்கியது. தணிக்கைக் குழுவினர் இந்த ஏகாலி என்ற வார்த்தையையும், தலைப்பையும் மாற்றும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகு தயாரிப்பாளருடன் விவாதித்து 'வாய்தா' என தலைப்பை மாற்றினோம்.இது மக்களுக்கான படைப்பு. மக்களுக்கான அரசியல் பேசும் 'வாய்தா' படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.



 



நடிகரும், நாடக ஆர்வலருமான பேராசிரியர் மு. ராமசாமி பேசுகையில், '' அண்மையில் இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கும் படைப்பு. படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் முழுவதும் எனக்கு நன்றாக பரிச்சயமானது.  அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நான் உறங்கி இருக்கிறேன். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களில் மனதை கனக்க செய்துவிடும் காட்சிகள் உண்டு. ஒரு நல்ல திரைப்படம் என்பது பார்வையாளர்களின் மனதை கனக்க செய்யவேண்டும் என்பார்கள். இன்றும் நாம் வாழும் சமூகத்தில் இப்படி ஒரு அவலங்கள் நடைபெறுகிறதே.. என்ற ஒரு ஆதங்கம் மனதுக்குள் எழும். அந்த அதிர்வை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



 



'வாய்தா' திரைப்படம் வர்ணத்தையும் பேசுகிறது. வர்க்கத்தையும் பேசுகிறது. வர்ணாசிரம தர்மப்படி இந்த சமுதாயத்திற்குள் அழுத்தப்பட்டிருக்கும் வண்ணார் சமூகத்தின் நடவடிக்கைகள், வாழ்வியல் விசயங்கள் இதில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் சாதிய மதவாத ஆதிக்க சக்திகளின் குரல் ஓங்கி இருக்கும் நிலையில், இது போன்ற படைப்புகள் வரவேண்டும். மக்களின் மனதில் சில கேள்விகளை எழுப்பும். எழுப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.



 



தமிழகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இந்த சமூகத்திலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வரவில்லை என நினைக்கிறேன். ஆனால் இவர்கள் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு வகையில் சடங்குகளுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறு சமூகத்தின் கடைநிலையில் வாழும் எளிய மனிதன் சட்டத்தின்முன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை மிக நேர்த்தியாக இயக்குநர் மகி வர்மன் உருவாக்கியிருக்கிறார்.



 



தற்போதைய கணினி மயமாக்கப்பட்ட சூழலில் இந்த சமூகத்தினருக்கு சலவை தொழிலாளர்கள் என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.



 



இன்றைய திரை உலகில் ஏராளமான இளைஞர்கள் அறிமுகமாகி சினிமாவை ஒரு வலிமையான ஆயுதமாக பயன்படுத்தும் திராணியை பெற்றிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தணிக்கை குழு மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது எதிர்காலத்தில் வரும் படைப்பாளிகள் தங்கள் கருத்தினை வெளியிடுவதற்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆனால் கடும் அழுத்தங்களையும் மீறி குறியீட்டுகளாலும், அழகியலோடும் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதனை வாய்தா படத்தின் மூலம் விதைத்திருக்கும் இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.



 



தயாரிப்பாளர் சி.வி. குமார் பேசுகையில், '' படத்தின் தயாரிப்பாளரான வினோத்குமார் என்னுடைய நண்பர் அவர் தொழில் முதலீட்டாளர்கள் இணையம் வழியாக தொழில் முதலீடு குறித்த சந்திப்பை நடத்தி மத்திய அரசுடன் இணக்கத்துடன் கூடிய நட்புடையவர். ஆனால் அவர் அதற்கு நேர் மாறாக ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். நல்லதொரு தரமான படைப்பாக இருக்கிறது.



 



ஆர்ட் பிலிம், இன்டிபென்டன்ட் பிலிம், கமர்சியல் பிலிம் என்றும், இதை கடந்தும் பல தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை நான் ஒரு பொதுத்தளத்திலான பார்வையாளர்களுடைய எண்ணத்தைக் கொண்டவன். இந்தப் படத்தை பார்க்கலாமா? பார்க்கக் கூடாதா. என்ற ஒரே ஒரு கேள்வி மட்டுமே என் முன் இருக்கும். அதை கடந்து ஆர்ட் பிலிம் கமர்ஷியல் பிலிம் என்ற சிந்தனை எல்லாம் இருக்காது. இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திரையரங்குகளுக்கு நுழைகிறோம் அதற்கு ஏற்றதா? இல்லையா? என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த வாய்தா படம் நல்ல படமாகவும், பொழுதுபோக்கிற்கு ஏற்ற படமாகவும் அமைந்திருக்கிறது.



 



இன்றைக்கு இருக்கும் நீதிமன்ற சூழலில் ஒரு சாதாரண மனிதன் நீதிமன்றத்தினை நாடினால் அவனுக்கு என்ன அனுபவம் கிடைக்கிறது என்பதனை துணிச்சலுடன் படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்படும் என்பது உறுதி. குறைந்தபட்சம் 50 நீதிமன்றங்களிலாவது படத்தைப் பற்றியும், படத்தயாரிப்பாளர் மீதும் வழக்கு பாயலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த படத்தில் ஏராளமான முரண்பாடுகள், கருத்து பேதங்கள் இருக்கிறது.



 



வாய்தா போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகங்கள் பெரிய அளவில் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.



 



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தோழர் சி. மகேந்திரன் பேசுகையில், ''  தமிழ் சினிமா மட்டுமல்ல அரசியல், வாழ்க்கை, இலக்கியம்.. இவை அனைத்தும் நேர்மையில் இருந்து விலகி செல்லும்போது, அதற்குரிய விலையை அது கொடுத்துவிட்டு தான் செல்லும். சினிமாவும் இப்படிதான். சினிமா என்பது ஒரு எஜுகேஷன். லூமியர் சகோதரர்கள் சினிமாவை உருவாக்கியபோது தயாரிப்பாளர்கள் கிடையாது. தெருக்கூத்து போன்று தன்னுடைய கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கும். 25 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டு இருந்த பொழுது அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்.



 



ஒரு தொழிலாளி உறங்கிக் கொண்டிருப்பான். அவன் காலில் ஒரு கரப்பான் பூச்சி கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, ரத்தம் வெளியேறும். அது அவனுக்குத் தெரியாது. அதன் விளைவு என்னவென்றால் அவன் தினமும் 20 மணி நேரம் உழைத்து விட்டு, தன்நிலை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை எந்தவித தொழில்நுட்ப இல்லாமல் நேர்த்தியாக உணர்த்தி இருப்பார். இது தொழிலாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கியது. அவர் ஊர் ஊராக சென்று இதனை காண்பித்தார். எது ஒன்று வளர்ச்சி அடைகிறதோ..அது வணிக மயமாகி விடும்.



 



இதுபோன்ற சூழலில் வித்தியாசமான படமாக பேராசிரியர் மு ரா குறிப்பிட்டதுபோல் வண்ணார் சமூகத்தை பற்றிய படமாக 'வாய்தா' உருவாகியிருக்கிறது. வண்ணார் சமூகத்திலேயே புரத வண்ணார் என்றொரு சமூக பிரிவும் இருக்கிறது. இவர்கள் யார் என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உடைகளை சலவை செய்து தருபவர்கள். உயர் ஜாதி மற்றும் இடை சாதிப் பிரிவினரின் ஆடைகளை சலவை செய்து தருவது வேறு ஒரு பிரிவு. நம்முடைய வர்ணாசிரம தர்மப்படி புரத வண்ணார் காண கூடாதவர்கள். ( Unseeable) அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Un Approachble ) பார்க்கக்கூடாதவர்கள்  என்று இவர்களை குறிப்பிடுகிறார். இவர்களை பார்த்தால் பார்த்தவர்களின் குடும்பம் கெடும். கெட்டுப்போகும். அழிந்து போகும்.. என்பதை போன்ற மூட நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் நள்ளிரவில் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்பவர்கள்.



 



என்னுடைய இளைய தோழர் மகி இதுபோன்ற ஒரு விசயத்தை படைப்பாக மாற்றும் போது, நான் வியந்து போனேன். பேராசிரியர் மு ரா குறிப்பிட்டதுபோல் துணிச்சல் மிக்க படைப்பாளியாகத் தான் நான் அவரை பார்க்கிறேன்.



 



என்னுடைய மகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மகனாக இருந்தாலும் அவரும் என்னுடைய இளைய தோழர் தான். அவரும், அவருடைய நண்பர்களும் கடினமாக உழைத்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.



 



இந்தப் படத்தின் தயாரிப்பாளரை படக்குழுவினர் எனக்கு அறிமுகப் படுத்தும்போது அவரிடம் ஒரு சிறந்த பண்பு இருந்தது. அது இந்தப் படைப்பில் நேர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது.



 



தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில் ஒன்றை குறிப்பிட்டார். 'இங்கு நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால் சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும். உலகம் தவறான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறதே.. மறுக்கப்பட்ட நியாயத்தை சொல்ல வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது' என குறிப்பிட்டார். ஏனெனில் மனிதன் வாழும் போதும்.. வாழ்ந்த பிறகும் நிம்மதியாக இறக்க வேண்டும். கெடுதல் செய்து செய்து இறக்க வேண்டுமா..? ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுதான் கலையாக வடிவம் பெறுகிறது.



 



இப்போதைய தமிழ் சினிமாவில் பல கூறுகள் இருக்கலாம். ஆனால் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். திரைத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையை உடையவர்களால் தான் மாற்றத்தை உண்டாக்க முடியும்.படத்தின் உள்ளடக்கத்திற்காக முதலீடு செய்து தன்னை இணைத்துக்கொண்ட பட தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். இது என்னுடைய கடமை என எண்ணுகிறேன். '' என்றார்.



 



விழாவின் இறுதியில் தோழர் சி. மகேந்திரன், 'வாய்தா' படத்தின் இசையை வெளியிட, அதனை சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் சி.வி. குமார் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா