சற்று முன்
சினிமா செய்திகள்
இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!
Updated on : 20 March 2025

முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
"எம்புரான்" டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன், எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் அளிக்கும் எனத் தெரிகிறது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது.
நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்” திரைப்படத்தை, புகழ் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இப்படத்தினை தமிழில் கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கன்னடத்தில் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, தெலுங்கில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!
சமீபத்திய செய்திகள்
பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி, திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான மனோஜ் பாரதி, ‘சமுத்திரம்’, ‘காதல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வருசமெல்லாம் வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியவர், சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.
இந்த நிலையில், நடிகர் மனோஜ் பாரதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து மனோஜ் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும், அவருக்கு இன்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவு உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனோஜ் பாரதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீர தீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூவைத் தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அருண்குமார் பேசுகையில், '' விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்றும் முதல் படம். இந்த அனுபவம் எப்படி இருந்தது என்றால் நாங்கள் இருவரும் இணைந்து பத்து இருபது திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு இந்த படத்தில் இணைந்தது போல் இருந்தது. படபிடிப்பு தளத்தில் அவ்வளவு சௌகரியமாக .. இயல்பாக பணியாற்ற வைத்தார். விக்ரம் சார் - எஸ் ஜே சூர்யா சார் ஒரு திரைப்படத்தில் இருந்தால் ... அதிலும் எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கிறார் என்றால்... அங்கு பாசிடிவ் நிறைய இருக்கும். சிறந்த நடிகர் சுராஜும் இதில் இணைந்திருக்கிறார். அனுபவம் மிக்க நடிகர்கள் ஒன்றிணைந்து என்னை போன்ற இயக்குநர்களின் கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். துஷாரா விஜயனும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார். தயாரிப்பாளருக்கும் நன்றி.
இந்தப் படம் ஒரு ரியலிஸ்டிக்கான மெயின் ஸ்ட்ரீம் கமர்சியல் ஃபிலிம். உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.
சீயான் விக்ரம் பேசுகையில், '' இந்த திரைப்படம் Raw & Rustic ஃபிலிம். இயக்குநர் அருண்குமார் இரண்டு வகையான படங்களையும் இயக்கி இருக்கிறார். அதாவது 'சேதுபதி' போன்ற கமர்சியல் படங்களையும் இயக்கி இருக்கிறார். 'சித்தா' போன்ற சென்சிடிவ்வான படங்களையும் இயக்கி இருக்கிறார் இந்த இரண்டு படத்தின் கலவையாக இந்த 'வீர தீர சூரன்' படம் இருக்கும்.
இந்தப் படத்தில் வழக்கமான மாஸ் கமர்சியல் திரைப்படங்களுக்கான இலக்கணத்தை மாற்றி புதிதாக முயற்சி செய்து இருக்கிறோம். ஹீரோ இன்ட்ரொடக்ஷன்... ஃபைட்.. சாங்ஸ்.. மாஸ் சீன்ஸ்.. என வழக்கமான விசயங்கள் இல்லாமல் புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறோம். இது எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்த திரைப்படத்தில் அனைவரும் சிறந்த பெர்ஃபாமர்ஸ். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இது போன்ற ஒரு கமர்சியல் திரைப்படத்தில் சிறந்த நடிகர்கள்.. ஒவ்வொரு காட்சிகளிலும் தங்களுடைய ஷட்டிலான பெர்ஃபார்மன்ஸை வழங்கி இருக்கிறார்கள். இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் காட்சிகளிலும்... பாடல்களிலும்... சண்டை காட்சிகளிலும்.. உரையாடல்களிலும் ... நுட்பமான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு எமோஷனல் கன்டென்ட் உள்ள படம். இதில் எஸ். ஜே. சூர்யாவும் நன்றாக நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகன். அவர் இயக்கிய 'குஷி', 'வாலி' போன்ற படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் நடிகராக மாறி அதிலும் வெற்றி பெற்று வருகிறார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
ஆக்ஷன் ஓரியண்டட் வயலன்ட் ஃபிலிமில் நடிகைகளுக்கு பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயனுக்கு நன்றாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை இயக்குநர் அளித்திருக்கிறார். இயக்குநர் அருண் குமாரின் படைப்பில் பெண் கதாபாத்திரம் வலிமையாக எழுதப்பட்டிருக்கும்.
சுராஜ் - ஒரு மல்டி டேலன்டெட் ஆக்டர். இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது அவருக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பேசி, பழகி தமிழில் பேச கற்றுக் கொண்டார். இந்தப் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு 'பீப் பாக்ஸ்' செய்து அனைவரையும் கவர்ந்தார்.
நான் மலையாளத்தில் அறிமுகமாகும் போது எனக்கு 'மதி' என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் தெரியும். இதனால் மலையாள படங்களில் நடிக்கும் போது.. மலையாள மொழி பேசி நடிக்கும் போது உள்ளுக்குள் டென்ஷனும் , பதற்றமும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு நீளமான காட்சியில் சுராஜ் தமிழில் அற்புதமாக நடித்துக் கொண்டே பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்தப் படத்தில் அனைவருக்கும் கிரே ஷேடு இருக்கும். அதற்கு ஒரு நியாயமும் இருக்கும். ஹீரோயின் கேரக்டர் மட்டும் தான் பாசிட்டிவ்வாக இருக்கும்.
சமீபத்தில் வெளியான 'பொன் மான்', 'மார்க்கோ',' ஆவேசம் 'போன்ற படங்கள் வெளியாகி மலையாள திரையுலகின் வளர்ச்சியை காட்டுகிறது. மலையாள திரையுலகம் தற்போது சிறப்பாக இருக்கிறது. 'மின்னல் முரளி 'பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. 'கே ஜி எஃப்', 'காந்தாரா', ' பாகுபலி', 'ஆர் ஆர் ஆர் ' என பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் பான் இந்திய படமாக வெளியாகும் பிருத்விராஜின் எம்புரான் படமும் வெற்றி பெற வேண்டும். நான் மோகன்லாலின் ரசிகன். எம்புரான் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. அந்தத் திரைப்படத்துடன் எங்களுடைய வீர தீர சூரன் படமும் வெளியாகிறது. இதுவும் ஒரு எமோஷனலான படம். இந்த இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கேரள ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
எஸ். ஜே. சூர்யா பேசுகையில், '' வீர தீர சூரன் படம் எப்படி இருக்கும் என்றால்.. இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி பாணியிலான மேக்கிங் ஒரு கிராம பின்னணியில் இருந்தால் எப்படி இருக்குமோ.. அப்படி இருக்கும். அருண்குமார் சினிமா மீது பெரும் காதல் கொண்டவர்.
இந்தப் படம் மலையாள ரசிகர்களுக்கு இரண்டு விசயங்களில் தொடர்பு ஏற்படும். முதலாவது இப்படத்தின் தயாரிப்பாளர். இந்த மண்ணை சார்ந்தவர். இண்டியூஜுவல் புரொடியூசர். கதையை நம்பி பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இயக்குநர் என்ன விரும்புகிறாரோ... அதை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். மதுரையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது 15 நாட்கள் மழையால் பணிகள் நின்றது. அப்போதும் அவர் இயக்குநருக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்தப் படத்தின் முதல் பாதி கதையை கேட்டவுடன் நான் தீர்மானித்து விட்டேன் இந்த படம் பெரிய வெற்றி படம் என்று. இதில் நடிக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டேன்.
சீயான் விக்ரம் - சுராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெறும் 16 நிமிட காட்சியை சிங்கிள் ஷாட்டில் படமாக்கும் போது.. இப்படத்தின் மீது அனைவருக்கும் இருந்த காதலும், அன்பும் வெளிப்பட்டது. இயக்குநர் இந்த படத்தினை எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கி இருப்பார் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும் என நான் நினைக்கிறேன். அவருடைய ஸ்டைலில் ஒரு மாஸான படத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு நாங்கள் எல்லாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறோம்.
காலங்களை கடந்து நிற்கும் ஒரு படமாக இந்த படம் இருக்கும். மாநகரங்களில் இந்த திரைப்படம் பேசப்படும். அருண்குமார் என்றொரு இயக்குநர் வீர தீர சூரன் என்ற படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார் என அனைவரும் பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்'' என்றார்.
சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், '' நான் நடிக்கும் முதல் வேற்று மொழி படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
மலையாளம் தவிர வேறு எந்த மொழியும் எனக்கு பேச தெரியாது. இந்தப் படத்தில் நான் தமிழில் பேசி நடித்திருக்கிறேன். இதில் கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் இந்த படக் குழுவினரை தான் சேரும்.
இந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட வேண்டும். ஏனெனில் மற்ற படங்களைப் போல் இது சாதாரண படமல்ல. இந்தப் படத்தின் முதல் ஷாட்டில் இருந்தே கதை தொடங்கி விடும். அதனால் அதனை காண தவறாதீர்கள். இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது .அதில் நான் இருக்கிறேன் '' என்றார்.
துஷாரா விஜயன் பேசுகையில், '' சித்தா படம் பார்த்துவிட்டு 45 நிமிடம் சிலையாக அப்படியே உட்கார்ந்து விட்டேன். அன்று இரவு இரண்டு மணி அளவில் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் இயக்குநர் அருண்குமாருக்கு ஒரு நீளமாக மெசேஜை ஒன்றை அனுப்பினேன். அவர் அதை பார்க்கவில்லை. ஆனாலும் அவருடன் பேச வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் எனக்குத் தெரியவில்லை... அவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு 'சாமி' படம் மிகவும் பிடிக்கும் . அதில் விக்ரம் சாருக்கும், திரிஷா மேடத்திற்கும் இடையேயான ரொமான்ஸ் நன்றாக இருக்கும். அது ஒரு மாஸ்டர் பீஸ். அதேபோன்று காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சீயான் விக்ரமும் சாருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்தப் படத்தில் கலைவாணி என்பது என் கேரக்டரின் பெயர். சுயநலமற்ற அன்பை அள்ளி வழங்கக்கூடிய கேரக்டர். இந்தப் படத்தில் அவருடைய உலகம் என்பது கணவரும், குழந்தைகளும் தான். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம்.அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம்.
மலையாள திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விரைவில் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். '' என்றார்.
இதனைத் தொடர்ந்து பிரபலமான லூலூ மாலில் பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக் குழுவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரசிகர்களும் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆதரவு அளித்தனர்.
விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்
இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார்.
'பிக் பாஸ்' புகழ் மணிகண்டன் ராஜேஷ் - ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த 'மெட்ராஸ் பிட்னஸ்' எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழா நிகழ்வில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் சுனில், வைபவ் , பப்லு பிருத்விராஜ், ஜெயச்சந்திரன் குழும உரிமையாளரும், தொழிலதிபருமான திரு. சுந்தர், பின்னணி பாடகர் ஏடிகே உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், தொழில் துறையினரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த உடற்பயிற்சி கூடத்தில் பெண்கள்/ ஆண்கள் என தனித்தனியாக உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் உள்ளன. முதல் தளத்தில் கார்டியோ எக்யூப்மென்ட் மற்றும் இரண்டாவது தளத்தில் நவீன கருவிகளுடனான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்திற்கும் முறையாக பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது.
எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து நேற்று பெங்களூரூ மந்த்ரி ஸ்கொயர் ( Mantri Square) மாலில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம் கலந்து கொண்டார்.
சீயான் விக்ரம் பேசுகையில், ''
ஹாய் பெங்களூரூ..!
'வீர தீர சூரன்' படத்தை இங்கு வெளியிடும் எஸ். எஸ். கஃபே நிறுவனத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் எஸ். யூ. அருண்குமார் - துஷாரா விஜயன் - எஸ். ஜே. சூர்யா - சுராஜ் மற்றும் படக்குழுவினரின் சார்பில் அவர்களுடைய அன்பை என் மூலமாக உங்களிடம் தெரிவிக்க சொன்னார்கள். இயக்குநர் - திரைப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். 'தில்', 'தூள்', 'சாமி' போன்ற படங்களைப் போல் நடிக்க வேண்டும். அதே சமயத்தில் 'பிதாமகன்' போலும் இருக்க வேண்டும் என நினைத்து, அதாவது உணர்ச்சி பூர்வமான படத்தை கமர்சியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி ஒரு கதைக்காக காத்திருந்தேன். அந்த கதை தான் இந்த 'வீர தீர சூரன்' படத்தின் கதை.
எஸ். யூ. அருண் குமாரின் 'சித்தா' படத்தை பார்த்திருப்பீர்கள். அவருக்கு அது போன்றதொரு உணர்வுபூர்வமான படத்தையும் இயக்கத் தெரியும். அதே போல் 'சேதுபதி' போன்ற படத்தையும் இயக்கத் தெரியும். அவர் இந்த படத்தில் இந்த இரண்டையும் கொண்டு வந்திருக்கிறார். இந்த திரைப்படம் ரொம்ப Raw & Rustic . ஒரு மாஸான ஃபிலிம். ஆனால் இது வேற மாதிரியாக இருக்கும். அதாவது மாஸாகவும் இருக்கும். ரியலாகவும் இருக்கும்.
இதைப் பற்றி பில்டப் செய்து சொல்ல விரும்பவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போன்ற கதையை ரியலாக செய்வதற்கு எங்களுக்கு நிறைய பெர்ஃபாமர்ஸ் தேவைப்பட்டார்கள். இதனால் எஸ். ஜே. சூர்யாவை தேர்வு செய்தோம். அவரைத் தொடர்ந்து துஷாரா விஜயனையும், சுராஜையும் தேர்வு செய்தோம். பிருத்வி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள்.
நீங்கள் படம் பார்க்கும்போது இதை தெரிந்து கொள்வீர்கள். இந்தப் படம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த படத்தில் பாடலாக இருந்தாலும்... சண்டை காட்சியாக இருந்தாலும்..
அதனை Raw வாக உருவாக்கியிருக்கிறோம். சின்னதாக ஒரு முயற்சியை செய்திருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. '' என்றார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
''இந்த திரைப்படம் சினிமா இலக்கணத்தை மீறி இருக்கும். படத்தில் என்னுடைய ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும்.. படத்தின் ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும். இன்ட்ரவல் பிளாக் வேற மாதிரி இருக்கும். வழக்கமான ஃபார்முலாவை உடைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறோம். புது முயற்சிக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தப் படத்தில் கேரக்டர்களின் பெர்ஃபாமன்ஸ் - ஃபைட் சீக்குவன்ஸ்.. சாங்ஸ் ... எல்லாம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கும்'' என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், '' இந்தப் படத்தின் டைட்டிலை 'காளி' என்று வைக்க நினைத்தோம். சமீபத்தில் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மீண்டும் 'காளி' என பெயர் வைத்தால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக.. 'வீர தீர சூரன்' என பெயர் வைத்தோம். காளி எனும் கதாபாத்திரத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும். '' என்றார்.
இந்நிகழ்வில் அந்த வளாகத்திற்குள் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் சீயான் விக்ரம் உற்சாகம் குறையாமல் பதிலளித்தார். அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரும் காத்து எம்மேல..' என்ற பாடலையும் பாடி பார்வையாளர்களை அசத்தினார். அதன் பிறகு மேடையில் நடனமும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது..
இந்நிகழ்வினில்…
நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது…
இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப்படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம், அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் தீபக் தேவ் பேசியதாவது…
எல்லா இசையமைப்பாளருக்கும், இது போலப் பெரிய படம் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். லூசிஃபர் போலவே இந்தப்படமும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இப்படம் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்தப்படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை மஞ்சு வாரியர் பேசியதாவது...
என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் லூசிஃபர். எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிரித்திவிராஜுக்கு நன்றி. பிரியதர்ஷினி எனும் கதாபாத்திரத்தை எனக்குத் தந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இவ்வளவு பெரிய படமாக இப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லாலேட்டனுடன் ஒரு சில படங்கள் மட்டும் தான் செய்துள்ளேன், இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை, எல்லாமே மறக்க முடியாத அனுபவம். இப்படம் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்தும்.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியதாவது...
இந்தப்படத்தின் முதல் பாகம், மிக எளிதாகச் செய்துவிட்டோம். அப்போது இத்தனை பதட்டம் இல்லை, ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு, நிறையப் பதட்டம் இருந்தது. இயக்குநராக பிரித்திவிராஜுக்கு நான் ஃபேன் ஆகிவிட்டேன், அவர் என்னிடம் கதை சொன்ன பிறகு, தூக்கமே வரவில்லை என்றார். அத்தனை அர்ப்பணிப்போடு படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார். மிக அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சாருக்கு நான் ரசிகன், மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும் நன்றி.
சவுண்ட் இன்ஜினியர் M R ராஜாகிருஷ்ணன் பேசியதாவது...
எல்லா கலைஞர்களுக்கும் இன்டர்நேஷனல் புராஜக்ட் செய்ய ஆசை இருக்கும், எனக்கு இந்தப்படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் பிரித்திவிராஜ், மோகன்லால், மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி சாருக்கு நன்றி.
நடிகர் அபிமன்யூ சிங் பேசியதாவது...
மோகன்லால் சாருடன் ஒர்க் செய்ய வேண்டும் என்கிற கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. அவரது இத்தனை வருட அனுபவத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். பிரித்திவிராஜ் மிகச்சிறந்த இயக்குநர், ஒரு நடிகராக அவர் இருப்பதால் அவரால் எளிமையாக நடிப்பை வாங்க முடிகிறது. இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்துள்ளார். எனக்குப் படிக்கும் காலத்தில் நிறைய மலையாள நண்பர்கள் இருந்தனர், அவர்கள் மூலம் மலையாளப்படம் பார்ப்பேன், இப்போது மலையாளப் படங்கள் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப தரத்துடன், பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் கார்த்திகேயா தேவ் பேசியதாவது...
நான் சலார் படத்தில் பிரித்திவிராஜ் சாரின் சின்ன வயது கேரக்டர் செய்தேன், பிரசாந்த் நீல் சார் என் நடிப்பைப் பார்த்து பிரித்திவிராஜ் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் என்னை இந்தப்படத்திற்கு காஸ்ட் செய்தார். அவருக்கு என் நன்றி. மோகன் லால் சாருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. அவர் ஒரு லெஜெண்ட். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய படமாக இருக்கும், எல்லோரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
மொழி மாற்று இயக்குநர் RP பாலா பேசியதாவது...
நான் முதலில் புலிமுருகன் படம் செய்தேன், பின்னர் லூசிஃபர் படத்திற்குச் செய்த போது, மோகன்லால் சாரை டப்பிங் பார்க்க அழைத்தேன் ஆனால் வரவே மாட்டேன் என்றார், என் கட்டாயத்தால் பார்க்க வந்தார், பாதி படம் பார்த்து சூப்பராக செய்திருக்கிறாய் எனப் பாராட்டினார். அப்போதே எம்புரான் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார். அவரால் தான் என் வாழ்க்கை மாறியுள்ளது. என் வாழ்க்கையை புலி முருகனுக்கு முன் புலி முருகனுக்குப் பின் எனப் பிரிக்கலாம், நான் இன்று நன்றாக இருக்கக் காரணம் அவர் தான், இந்தப்படமும் மோகன்லால் சார் கலக்கியிருக்கிறார் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் பிரித்திவிராஜ் பேசியதாவது...
என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு, முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதி, படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை, இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
நடிகர் மோகன்லால் பேசியதாவது…
இது ஒரு டிரையாலஜி படம், லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும். உங்களைப் போல நானும் மார்ச் 27 ஆம் தேதி, ரிலீஸுக்கு காத்திருக்கிறேன் நன்றி.
நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அபிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, கிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகிறது “எம்புரான்” திரைப்படம். இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்தியில் வெளியிடவுள்ளது.
இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!
ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான “ ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை” பாடலும் வெளியிடப்பட்டது.
இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸை தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல், திரை ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.
நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்வில் நடந்தால் எனும் ஃபேண்டஸி தான் இந்தப் படத்தின் மையம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக, இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.
தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும்.
இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை அனுபவிக்காமல் கண்டிப்பா 90% மக்கள் இருக்க முடியாது. அவர்களின் கதை தான் இந்தப்படம்.
ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மல்லையன் பேசியதாவது….
எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். EMI எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர் EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கதையை இந்த EMI படம் சொல்கிறது. EMI எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
இந்த விழாவை என் குடும்ப விழா எனச் சொல்லலாம். என் அஸிஸ்டெண்டின் அஸிஸ்டென்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். என் கொள்ளுப்பேரன் எனச் சொல்லலாம். EMI அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம். இந்த படக்குழு EMI ல் தப்பித்துவிட்டார்கள். முதல் EMI சரியாகக் கட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இங்கு இயக்குநர் பாக்யராஜ் வந்துள்ளார். அவர் தன் முதல் படத்தில் ஒரு சிறு தெருவை மையமாக வைத்து, மிக அழகான படத்தைத் தந்தவர். இப்போது யாராலும் அது முடியாது. இப்போது சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை, நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி விட்டார்கள். அந்தக்காலத்தில் படம் பூஜையின் போதே படம் விற்று விடும். ஆனால் இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. அப்போது 16 படம் வெளியாகி 16 படமும் ஜெயிக்கும், பல வித்தியாசமான களங்களில் படம் வரும், இப்போது அந்த மாதிரி ஹெல்தி சினிமா இல்லை. இப்போது இருக்கும் இயக்குநர்களை போனில் பிடிக்க முடியவில்லை. எங்கே போகிறது தமிழ் சினிமா? இந்த நிலைமையை மாற்ற இம்மாதிரி EMI படத்தை ஆதரிக்க வேண்டும். இப்போது சின்ன படங்கள் தான் ஓடுகிறது. ரப்பர் பந்து, குடும்பஸ்தன் படங்கள் வரும் வரை அதைப்பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி. அது போல இந்தப்படமும் வெற்றி பெறட்டும். படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
சின்னத்திரை புகழ் ஆதவன் பேசியதாவது..
படத்தில் நான் வந்த சீனை விட அதிகமாக எனக்கு போஸ்டர் வைத்துள்ளார்கள் நன்றி. வாய்ப்பு தந்த சதாசிவம் சாருக்கு நன்றி. நானும் அஜித் சாரும் ஒரே மாதிரி, வருடத்துக்கு ஒரு படம் தான் செய்வோம். இங்கு மேடை இயக்குநர் சங்கம் போல உள்ளது. வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நயன்தாரவை போல இனிமேல் எனக்கு பிளாக் பாண்டி பட்டம் வேண்டாம் எனக் கூறியிருக்கும் பாண்டிக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்ப இருக்கும் தயாரிப்பாளர்கள் 4 கோடிக்கு படம் செய்வதில்லை, 40 கோடிக்கு படம் செய்யவே ஆசைப்படுகிறார்கள். எது புதிதாக வந்தாலும் கதை தான் முக்கியம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என சொல்லிச்சென்ற ஆர் வி உதயகுமார் அண்ணனுக்கு நன்றி.
நடிகை சாய் தன்யா பேசியதாவது…
EMI படம் மிக அழகான படம், கிருஷ்ணகிரியில் தான் ஷீட் செய்தோம். EMI யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு விழிப்புணர்வு தரும் படமாக இப்படம் இருக்கும். EMI ஆல் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்களை, இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று காட்டுங்கள். நன்றி.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது…
இயக்குநர் பாக்யராஜ் முதலாக பெரும் ஆளுமைகள் இருக்கும் மேடையில் நான் இருப்பது எனக்குப் பெருமை. தன் சிஷ்யனுக்காக இவ்வளவு இறங்கி வேலை செய்யும் பேரரசுவுக்கு நன்றி. எத்தனை பேருக்கு இந்த மனம் வரும் என தெரியவில்லை. இந்தப்படத்தின் பாடல் விஷுவல் பார்க்கும்போது ஹீரோ பக்கத்து வீட்டு பையன் போல இயல்பாக இருக்கிறார். நன்றாக நடித்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. சன் டிவி ஆதவன், பிளாக் பாண்டி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். படத்தின் டிசைன் முதல், எல்லாமே மிகத்திட்டமிடலுடன் உருவாக்கியிருக்கிறார்கள். EMI வாங்காத ஆளே இருக்க முடியாது, எல்லோருக்கும் மிக எளிதாக கனக்ட் ஆகும் படம். இந்தப்படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்குமென நம்புகிறேன் வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை பேசியதாவது…
10 வருடங்களுக்கு முன் இயக்குநரும் நானும் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம், அதை ஞாபகம் வைத்து, என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது…
இயக்குநர் பேரரசுவிற்காக தான் அத்தனை பேரும் வந்துள்ளார்கள். பேரரசு எங்கள் சங்கத்திற்காகக் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி, அவரின் உதவியாளார் என்பதால் தான் அனைவரும் வாழ்த்த வந்துள்ளார்கள். பாக்யராஜ் சார் வந்துள்ளார் அவருடைய படங்கள் எல்லாம் இன்றும் ரெஃபரென்ஸ் தான். அவருடைய புத்தகத்தைப் படித்தால் திரைக்கதை எழுதி விடலாம். மூத்தவர்களை எல்லோரும் மதிக்க வேண்டும். மலையாளத்தில் வாராவாரம் பாசில் ஜோசப் கண்டெண்டுடன் படம் தருகிறார் ஆனால் அதை அந்தகாலத்திலேயே தந்தவர் பாக்யராஜ் சார். படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்களே கொண்டு சேர்த்து விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்டால் படம் ஹிட், சதாசிவம் முதல் படத்தில் நல்ல கண்டண்ட் உடன் படம் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு முழு ஆதரவு தாருங்கள். புதுமுகங்களை நம்பி தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது…
என்னை இயக்குநர் சதாசிவம் அழைத்திருந்தார். சின்னப்படங்களுக்கு அழைத்தால் எப்போதும் நான் வந்துவிடுவேன். நல்ல தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் தயாரிக்க வருவதில்லை என்கிறார்கள். ஆனால் நடிகர்கள் எல்லாம் தாங்களே தயாரிக்கிறார்கள். அண்ணா அம்மா எல்லாம் தயாரிப்பாளர்கள் எனும் போது, நாங்கள் என்ன தான் செய்வது. நல்ல கதைகள் வந்தால் நாங்கள் தயாரிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் இப்போது நல்ல கதைகள் வருவதில்லை. இந்தப்படம் நல்ல கதையுடன் வந்துள்ளது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசியதாவது…
எல்லோரும் பேசும் போது, தயாரிப்பாளர் யாருக்கும் EMI வைக்கவில்லை என்பது தெரிந்தது. அவரைப்பற்றி எல்லோரும் பெருமையாகச் சொன்னார்கள் அவருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அருமையாக உழைத்துள்ளனர். இயக்குநர் நடிகராகவும் நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருந்தது. பார்க்க அழகாக இருந்தது. பாடல்கள் எல்லாம் சூப்பராக இருந்தது. EMI எல்லோர் வாழ்விலும் கனக்ட் ஆகக் கூடியது. இப்படத்தில் நிறைய நல்ல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இயக்குநர் படத்தை அழகாக எடுத்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் போன மாதம் மட்டும் 32 படங்கள் வந்துள்ளது. இதை எப்படி அணுகுவது எனத் தெரியவில்லை. மக்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருகிறார்கள். நல்ல படம் எடுத்துள்ளீர்கள் அதைச் சரியாக விளம்பரப் படுத்துங்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகை தேவயானி பேசியதாவது..
இயக்குநர் சங்கத்திலிருந்து இந்த படத்தின் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். EMI டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. EMI வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லோரும் EMI வாங்குகிறோம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநரே நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள் படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க்கையில் எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும், புதிதாக முயற்சி செய்ய வேண்டும், அந்த வகையில் தான் இயக்கம் படித்து குறும்படம் எடுத்தேன். அதன் திரையிடல் இங்கு தான் நடந்தது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது..
என் அழைப்பை ஏற்று வந்த ஆளுமைகளுக்கு என் நன்றி. என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது. சினிமாவில் முதன் முதலில் என்னை கதை எழுத வைத்தவர் பாக்யராஜ் சார் தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என போட வைத்தது அவர் தான். இயக்குநர் என்றால் அவர் தான் கதை எழுத வேண்டும், என விதியை உருவாக்கியவர் அவர் தான். அவர் ஒரு ஜாம்பவான். அவர் வாழ்த்த வந்திருப்பதற்கு நன்றி. EMI எல்லோரும் வாங்கியிருப்பார்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள் ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள், வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார்கள், வசூலிக்க வருபவர்களிடம் பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆம்பளைகள் வாங்கும் EMI ஆல் பாதிக்கப்படுவது பெண்கள் தான். EMI எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம், EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. இன்று டாஸ்மாக் ஒரு போதை, EMI இன்னொரு போதை, இது ரெண்டும் அழிய வேண்டும் நன்றி.
இயக்குநர் சதாசிவம் சின்னராஜ் பேசியதாவது..
EMI படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது. ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு EMI டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன். முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான் தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன், நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான் முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன். நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது….
EMI டைட்டிலே எளிதாக புரிகிறது. சில நேரம் பட டைட்டிலே புரியாது, இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே நடிகராகத் தைரியமாக ஆக்கியுள்ளார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். விஷுவல் பார்க்க நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன் ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.
கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற " என் நண்பனே " என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர்.
யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால், ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்பதாலேயே ‘டாக்சிக்’ திரைப்படம், உலக நாடுகளை இணைக்கும் பாலமாக செயல்பட உள்ளது. இந்திய மற்றும் சர்வதேச சினிமாவின் திறமையான கலைஞர்கள் இப்படத்தில் ஒருசேர பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது, இதன்மூலம் அனைத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க உள்ளது.
படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.
வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத் தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸில் நடித்திருக்கிறார்.
இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குநர் ராமு செல்லப்பா அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர்.
மொழிபெயர்ப்பாளர் மூலம் எனக்கு கதை சொல்ல அவர் மும்பைக்கு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் மொழி எனக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு முழுக்க இயக்குநர் ராமு செல்லப்பா எனக்கு உதவி செய்தார்” என்றார்.
’ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகிறது.
'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!
'மாடர்ன் மாஸ்ட்ரோ ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.
உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக 'ஸ்வீட் ஹார்ட்' இருந்ததால்... ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் - டி என் சி திரையரங்கத்திற்கும், கோவை - பிராட்வே திரையரங்கத்திற்கும், திருப்பூர் - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை - வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி - எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா